[This English translation of the Tamil story is by Google AI Studio (edited by V.N.Giritharan The original Tamil version of the story follows the translation. Digital Painting Technique (Google Nano Banana) assistance: VNG]
This dad is always like this. He finally managed to buy me the book "Harry Potter and The Goblet of Fire." J.K. Rowling's Harry Potter series is one of my favorite book series. But my father always made excuses and delayed buying this particular book. The reason was its price – thirty-five Canadian dollars. Last time, when he took me to Chapters, he promised to buy this book. But, as usual, he finally threw up his hands. "Instead of this one book, your mom will buy you two 'Unfortunate Events' books," he said, and bought them for me. Lemony Snicket's 'A Series of Unfortunate Events' is also a series I really like. Miss Elizabeth, my class teacher, introduced me to this series. The way poor Violet, Klaus, and baby Sunny, who have no parents, are tormented by the wicked Olaf! They are so pitiful. That wicked Olaf killed their parents. Now he's trying to get their inheritance too. If it weren't for Mr. Poe, their plight would be even more miserable.
I really love these books. My dad does too. He always buys books. But for some reason, he always hesitates to buy these series books. I still don't understand why. It was the same when he initially hesitated to buy Mary Pope Osborne's Magic Tree House series. This is my most favorite series. I wish I could wander through the past and future like Jack and Annie do through the books in the magic tree house every time. But we live in an apartment in the city. None of this is possible. Dad always says, "Just wait, dear! I'll buy a house in two years." You can never trust this dad. But I wonder if I'm causing Dad too much trouble. Poor Dad! I'm a big expense for him. He never gets time to watch the news on TV because of me. When there's no school, I have to watch TV until I go to sleep. I watch my favorite shows. Bill, Julie One, Julie Two, Patty, and Giselle, who host the 'TVO Kids' show, are all great. But my favorite is 'The Big Bang' show. It's hosted by Violet Berlin and Gareth Jones. They explain how to do games and puzzles. Neil Buchanan's 'Art Attack' is also one of my favorites. Neil beautifully demonstrates how to create art using unused items at home. Martin Kratt and Chris Kratt's 'Zoboomafoo' and the toy lemur captivated me. Their 'Kratts' Creatures' show is also a good one. These are shows that provide information about animals.
Are you thinking, why is she constantly talking about her preferences? Are you wondering why she hasn't said anything about herself? Just wait, I'll tell you, listen. My name is Savithri. I am only nine years old. I am a Canadian citizen. I was born in Scarborough Grace Hospital in Toronto. They say I really troubled my mom when I was born and came into this world. Both my dad and mom were Sri Lankan citizens who became Canadian citizens. They say there was a constant war in Sri Lanka. That's why they came here. They came as refugees. Dad was the first to come. Dad apparently had a big house and garden in his village. He was an engineer working in a cement factory in Sri Lanka. If there hadn't been a war there, he would never have come here. I would always say, "Daddy! Then you would have lost me." To that, he would say, "Kunjoo! How could I have lost you, darling? You would have lost Canada then. You would have been a Sri Lankan citizen!" Whenever Dad calls me 'Kunjoo' like that, I always want to hug him. He calls me with so much love mixed in.
Dad says Mom was the only girl in his family. The other three were boys. Everyone loved her so much. He says it makes him sad to see her, who was brought up so pampered, working in a factory here. For many years after she came to Canada, he didn't let her work. But for the past year, she has been insisting on going to work on her own. I felt that was a good thing in a way. If Mom works in the factory during the day, Dad works as a security guard in a city hospital from midnight until morning. Dad says there isn't a job he hasn't done since coming to Canada. From washing cups in restaurants, being a driver delivering goods and food, cleaning office floors and banks, to security guard work, he has done so many jobs. Mom often says, 'Poor man. A man who should have lived a certain way in the village has to suffer like this here, it's fate. If there were no problems in the village, I would take all of you and go there the next moment.' At such times, I would cry and insist, 'How can that be? I am a citizen of this country. I won't come there. I want Canada.' I cannot even imagine going to another country from this one. Why don't Dad and Mom understand this? This country is as important to me as their country is important to them. In the past, Dad used to often say, 'Let's save some money. We can all go to Kodaikanal. We should show the child all our culture.' But back then, I would stubbornly cry, 'That's not possible. I'm Canadian. I'll stay here.' Now, it seems they have earned that little money... But Dad is not like before now. 'If you think about it... why should I ruin our child's future for my desire? Why should our child, born here, face the same situation we did? We didn't get recognition for our foreign educational qualifications here. And we have to struggle so much to get it. Not everyone's family circumstances allow them to struggle. If our child studies in India and comes back here someday, she will also have to face problems like us,' he would say. Dad has now changed his future plan. He would say, 'I need to work a little more, pay off for a house completely, put some money in the bank for your daily expenses, and then I should spend some time there and some time here.' At such times, Mom would jokingly say, 'It's enough living with you all this time. I will never be with you in my last days.' But Dad would then tell me, 'Kunjoo! You become a doctor and get Mom a job at the reception. That will be just right for her,' and he would laugh. To that, I would say, 'Dad! I'll get a job for you too.' And Dad would laugh and say, 'You naughty Kunjoo!'
But for some days now, I haven't quite understood why Mom and Dad started fighting frequently. They start arguing over small things. A quarrel that starts normally quickly heats up. Dad starts throwing whatever he finds at Mom. If Mom gets caught, he starts hitting her indiscriminately. Initially, Mom would stay silent, but then she too starts picking up whatever she can and throwing it at Dad. Mom and Dad apparently knew each other since childhood and grew up together. What happened between them? Dad apparently brought all his relatives to Canada. Mom's relatives are all still in Sri Lanka. Dad often used to say, 'You should go to the village for a while and see your relatives.' But Mom would often unnecessarily start talking to Dad about his relatives in a dismissive way. Immediately, a fight would start. Dad, who would be calm until then, would burst into anger. A war would begin. I would be caught in the middle, bewildered. Why do they fight like this over everything? One day, unable to bear it, I asked, 'Canadians don't fight like this. Why do you Sri Lankans fight like this?' It hurt Dad's feelings. He worried, 'You've asked just like some other Canadians here do, darling.' I also felt sad. He truly worried, 'How did your young mind come to differentiate like this?' I somehow comforted Dad by caressing him. One evening, they were both fighting as usual.
"What have you achieved in these ten years since coming to Canada? You fret over your own people. Do you care about us even a little bit?" Mom asked, and Dad's anger flared up. "Haven't I been taking care of you all these years? Don't you know that?" When Dad asked this, Mom replied, "What have you done that others in the village haven't? Everyone takes care of their family, don't they? If it weren't for you, I would have applied for social assistance," and that's when Dad couldn't bear it. After that, I also started controlling myself a lot. I don't interfere in their fights. But it's truly upsetting. However, these frequent quarrels gradually escalated, and one day, Dad stopped coming home. After that, I couldn't bear to be home. Mom was also crying all the time. No one knew where Dad was. But we learned that Dad was in Toronto with a friend of his. Through that friend, Dad contacted me. "Dad! Why, Dad! Did you leave us? I don't like anything without you. No one helps me with my homework," I said. After that, Dad would come every evening for me, ring the doorbell outside our apartment building, and wait. We would both go to the nearby library. After all the homework was done, Dad would take me to 'McDonald's'. Every day, when Dad brought me back home, I would say, "Dad! When are you going to come back and stay with us?" To that, he would say, "Kunjoo! Your mother will only understand everything if she lives alone. If she understands and calls me, I will come. After that, we shouldn't have such unnecessary fights." I would ask Mom, "Mom! What are you saying? Dad is saying this." To that, she would angrily say, "You won't stay quiet. Whenever he left. I washed my hands of him then itself. I can live alone too." But after that, she would start crying. I don't know why Mom and Dad live with such stubbornness.
Why don't they realize the impact this has on me, that I exist?
I feel their fights are over unnecessary things. Why don't they feel that way? Dad! Please come back and be with us again. If you do, we'll all be ready to come to India or wherever you said, Dad! Even if I don't like it, you and Mom are what's important to me, Dad. Please come back and be with us again. If you two don't talk to each other, that's fine. Just be together. That's enough for me, Dad! Dad! You often talk about your childhood experiences, don't you? You must come back to us to give me such experiences at least. You came here saying there was a war in your hometown, didn't you? The war there separated everyone. Is another war necessary between you two here? Is such a war that brings division over unnecessary things necessary? Tell me, Dad! Tell me, Mom! Dad! When are you coming back? Mom! When are you going to give up your foolish stubbornness?
Thanks: Thinai.com, Pathivugal, Gnanam (Diaspora Special Issue Collection) & Eelanaadu (Canada) -
புகலிடம் கதை: சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை! - வ.ந.கிரிதரன் -
இந்த அப்பா எப்பொழுதுமே இப்படித்தான். Harry Potter and The Goblet of fire புத்தகத்தைக் கடைசியில் ஒரு மாதிரி வாங்கித் தந்து விட்டார். ஜெ.கெ.ராவ்லிங்கின் ஹரி பாட்டர் தொடர் புத்தகங்கள் எனக்குப் பிடித்த தொடர்களிலொன்று. ஆனால் இந்தப் புத்தகத்தை மட்டும் அப்பா ஒவ்வொருமுறையும் வாங்குவதற்குச் சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டு வந்தார். காரணம் இதன் விலைதான் தான். முப்பத்தைந்து கனடியன் டொலர்கள். சென்ற முறை சாப்டர்ஸ்ஸிற்குக் கூட்டிப் போனபோது இந்தப் புத்தகத்தை வாங்கித் தருவதாகத் தான் கூட்டிப் போனார். ஆனால் வழக்கம் போல் இறுதியில் கையை விரித்து விட்டார். 'உனக்கம்மா இந்த ஒரு புத்தகத்திற்குப் பதிலாக இரண்டு 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' ( The unfortunate events ) புத்தகங்களை வாங்கித் தருகிறேன்' என்று வாங்கித் தந்து விட்டார். லெமொனி சினிக்கெட்டின் 'துரதிருஷ்ட்டவசமான சம்பவங்கள்' தொடரும் எனக்கு மிகவும் விருப்பமான தொடர் தான். இந்ததொடரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் மிஸ் எலிஸபெத். எனது கிளாச் டீச்சர். தாய் தகப்பனில்லாத வயலட், கிளாஸ், குழந்தை சனியை பொல்லாத ஓலாவ் படுத்தும் பாடிருக்கிறதே. பாவம் அவர்கள். அவர்களது அப்பா அம்மாவை இந்தப் பொல்லாத ஓலாவ்தான் கொன்று விட்டான். இப்பொழுது இவர்களின் சொத்தினை அடைவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றான். திரு. போ (Mr.Poe) மட்டுமில்லையென்றால் இவர்களது பாடு இன்னும் அதிகத் துன்பம் நிறைந்ததாகவிருந்திருக்கும்.
இந்தப் புத்தகங்களென்றால் எனக்கு ரொம்பவும் உயிர். அப்பாவுக்கும் தான். எந்த நேரமும் புத்தகம் புத்தகமாய் வாங்கி வருவார். ஆனால் ஒவ்வொருமுறையும் இந்தத் தொடர் புத்தகங்களை வாங்கித் தருவதற்கு மட்டும் அப்பா எப்பொழுதுமே முதலில் தயங்கத் தான் செய்கிறார். அது தான் ஏனென்று இன்னும் எனக்குப் புரியவில்லை. இப்படித்தான் மேரி பாப் ஆஸ்பார்னின் மந்திர மர வீடு (Magic Tree House) தொடர் நூல்களையும் முதலில் வாங்கித் தர அப்பா தயங்கிக் கொண்டிருந்தார். எனக்கு மிகமிகப் பிடித்த தொடர் இது தான். ஜக்கும் ஆன்னியும் ஒவ்வொரு முறையும் மந்திர மர வீட்டிலுள்ள புத்தகங்களினூடு கடந்த காலம், வருங்காலமென்று அலைந்து திரிந்து வருவதைப் போல் எனக்கும் அலைந்து திரிந்து வர ஆசைதான். நாங்கள் இருப்பதோ நகரத்துத் தொடர்மாடி இல்லமொன்றில். இதற்கெல்லாம் சாத்தியமேயில்லை.அப்பா எப்பொழுதுமே சொல்லிக் கொண்டுதானிருக்கிறார் 'கொஞ்சம் பொறம்மா! இன்னும் இரண்டு வருடங்களிற்குள் வீடு வாங்கி விடுகின்றேன்' என்று. இந்த அப்பாவை ஒரு போதுமே நம்ப முடியாது. ஆனால் அப்பவுக்கு நான் நிறையத் தொந்தரவு தான் செய்கின்றோனோ தெரியவில்லை. பாவம் அப்பா! என்னால் அவருக்கு நிறையச் செலவு. தொலைக் காட்சியில் செய்திகள் பார்ப்பதற்கு அப்பாவுக்கு என்னால் நேரமே கிடைப்பதில்லை. பாடசாலை இல்லாத நேரங்களில் தூங்கப் போகும் மட்டும் எனக்குத் தொலைக்காட்சி பார்க்கவேண்டும். எனக்குப் பிடித்தமான காட்சிகள் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டி.வி.ஒ.கிட்ஸ்' நிகழ்ச்சியினை நடத்தும் பில், யூலி ஒன்று, யூலி இரண்டு, படி (Patty), சிசெல் எல்லோரும் நன்றாக நடத்துவார்கள். ஆனால் எனக்குப் பிடித்தவை 'பெரு வெடிப்பு' (The Big Bang) காட்சி தான். வயலட் பேர்லினும், ஹேரித் ஜோன்ஸ்சும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சி. விளையாட்டுகள், புதிர்கள் எல்லாவற்றையும் எவ்விதம் செய்வதென்று விளக்கம் தருவார்கள். நீல் பஞ்சனானின் ' ஓவியத் தாக்குதலும்' (Art Attack) எனக்கு மிகவும் பிடித்தவை. வீட்டில் ப'விக்கப் படாமலிருக்கும் பொருட்களைக் கொண்டு எவ்விதம் ஓவியங்களை உருவாக்குவதென்று அழகாக நீல் செய்து காட்டுவார். மார்டின் க்ராட், கிறிஸ் கிராட் சகோதரகளின் 'சுபூமொவூ' ( Zoboomofoo) , பொம்மை லீமா எல்லாம் என்னைக் கவர்ந்தவை. இவர்களின் 'கிராட் உயிரினங்கள்' காட்சியும் நல்லதொரு காட்சி. மிருகங்களைப் பற்றிய தகவல்களைத் தரும் காட்சிகளிவை.
என்ன இவள் ஓயாமல் தனக்கு விருப்பமானதைப் பற்றியே கூறிக் கொண்டிருக்கிறாளென்று பார்க்கின்றீர்களா? தன்னைப் பற்றி ஒன்றுமே கூறவில்லையேயென்று பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள் கூறி விடுகின்றேன் கேளுங்கள். என் பெயர் சாவித்திரி. எனக்கு வயது ஒன்பதுதான் ஆகிறது. நான் ஒரு கனடியப் பிரசை. நான் பிறந்தது டொராண்டோ மாநகரிலுள்ள ஸ்கார்பரோ கிரேஸ் ஆஸ்பத்திரியில் தான். நான் பிறக்கும் பொழுதே அம்மாவை நல்லா வருத்திப் போட்டுத் தான் இவ்வுலகிற்கு வந்துதித்தேனாம். என் அப்பா அம்மா இருவரும் ஸ்ரீலங்காப் பிரசைகளாகவிருந்து கனடியப் பிரசைகளானவர்கள். ஸ்ரீலங்காவில் ஒரே யுத்தமாம். அதனால் தான் இங்கு வந்தவர்களாம். அகதியாக வந்தவர்களாம். அப்பா தான் முதலில் வந்தவராம். அப்பாவிற்கு அவரது ஊரில பெரிய வீடு தோட்டமெல்லம் இருந்ததாம். அவர் ஸ்ரீலங்காவில் சீமெந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராக வேலை பார்த்து வந்தவராம். அங்கு மட்டும் யுத்தம் ஏற்பட்டிருக்காவிட்டால் அவர் ஒரு போதுமே இங்கு வந்திருக்க மாட்டாராம். அப்பொழுதெல்லாம் நான் கூறுவேன்: "டாடி! அப்போ என்னை நீங்கள் இழந்திருப்பீர்களேயென்று." அதற்கவர் கூறுவார்: "குஞ்சூ! எப்படியம்மா நான் உன்னை இழந்திருக்க முடியும். அப்பொழுது நீ தான் கனடாவை இழந்திருப்பாய். நீ தான் ஸ்ரீலங்காப் பிரசையாக இருந்திருப்பாயே!". அப்பா என்னை அப்படிக் 'குஞ்சூ' என்ற் அழைக்கும் போது எனக்கு எப்பொழுதுமே அப்பாவைக் கட்டிக் கொள்ள வேண்டுமென்றிருக்கும். அவ்வளவு தூரம் அன்பையெல்லாம் குழைத்துக் கூப்பிடுவார்.
அப்பா கூறுவார் அம்மா அவரது குடும்பத்தில் ஒரேயொரு பெண்பிள்ளையாம். மற்ற மூவரும் ஆண்பிள்ளைகள் தான'ம். எல்லோருக்கும் அவவென்றால் உயிராம். அவ்வளவு செல்லமாக வளர்ந்தவ இங்கு வந்து தொழிற்சாலையில் வேலை செய்வதைப் பார்த்தால் அவருக்குக் கவலையாகவிருக்குமாம். அவ கனடாவிற்கு வந்ததிலிருந்து பலவருடங்களாக அவவை வேலை செய்யவே அவர் விடவில்லையாம். ஆனால் ஒரு வருடமாகத் தானாம் அவ தானாகவே வேலைக்குப் போகவேண்டுமென்று அடம் பிடித்து வேலைக்குப் போகின்றாவாம். அதுவும் ஒரு விதத்திற்கு நல்லதுதானே என்று எனக்குப் பட்டது. அம்மா பகலிலை தொழிற்சாலையில் வேலையென்றால் அப்பா நள்ளிரவிலிருந்து காலை வரை நகரிலுள்ள ஆஸ்பத்திரியொன்றில் பாது காவலனாக வேலை செய்கின்றார். அப்பா சொல்லுவார் தான் கனடா வந்து செய்யாத வேலையில்லையென்று. உணவகங்களில் கோப்பை கழுவியதிலிருந்து, பொருட்களை உணவுகளை விநியே'க்கும் சாரதி, ஆபிஸ் தளங்கள், வங்கிகளைக் கழுவியதிலிருந்து பாதுகாவலன் வேலை வரை எத்தனையோ வேலைகள் செய்து விட்டாராம். அம்மா அடிக்கடி சொல்லுவா 'பாவம் இந்த மனுசன். ஊரில் என்ன மாதிரி இருக்க வேண்டிய மனுசன் இங்கு வந்து இப்படி அனுபவிக்க வேண்டுமென்று விதிதான். ஊரில் மட்டும் பிரச்சினை இல்லையென்றால் அடுத்த கணமே உங்கள் எல்லோரையும் கூட்டிக் கொண்டு நான் அங்கு போய் விடுவேன்.' அப்பொழுதெல்லாம் நான் 'அதெப்படி. நான் இந்நாட்டுப் பிரசை. நான் அங்கெல்லாம் வர மாட்டேன். எனக்குக் கனடா தான் வேண்டும்' என்று அழுது அடம் பிடிப்பேன். இந்த நாட்டை விட்டு வேறு ஒரு நாட்டிற்குப் போவதை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஏன் இதனை அப்பாவும் அம்மாவும் உணர்கின்றார்களில்லை. அவர்களிற்கு எப்படி அவர்களது நாடு முக்கியமோ அப்படி முக்கியம் எனக்கு இந்த நாடும். முன்பெல்லாம் அப்பா அடிக்கடி கூறுவார் 'கொஞ்சக் காசு சேரட்டும். பேசாமல் எல்லோரும் கொடைக்கானல் போய் விடலாம். குழந்தைக்கு எங்களுடைய பண்பாடெல்லாவற்றையும் காட்ட வேண்டுமெ'ன்று. ஆனால் நான் அப்பொழுதெல்லாம் 'அது மட்டும் முடியாது. நான் கனடியன். இங்குதானிருப்பேன்' என்று அடம் பிடித்து அழுவேன். இப்பொழுதோ அந்தக் கொஞ்சக் காசையும் அவர்கள் உழைத்து விட்டார்கள் போல் தெரிகிறது... ஆனால் அப்பா இப்பொழுது முன்போலில்லை. 'யோசித்துப் பார்த்தால் ..என்னுடைய ஆசைக்காக ஏன் எங்களுடைய குழந்தையின் எதிர்காலத்தைப் பாழாக்க வேண்டும். எங்களுக்கு ஏற்பட்ட நிலைமை இங்கு பிறந்த எங்களுடைய குஞ்சுக்கும் ஏன் ஏற்படவேண்டும். எங்களுக்குத் தான் எங்களுடைய வெளிநாட்டுக் கல்வித் தகைமைகளிற்குரிய அங்கீகாரம் இங்கு கிடைக்கவில்லை. கிடைப்பதற்கும் எவ்வளவோ போராட வேண்டும். எல்லொருக்கும் போராடுவதற்கும் அவர்களது குடும்ப நிலைமைகள் விடுவதில்லை. எங்களுடைய குஞ்சு இந்தியாவில் படித்து விட்டு ஒருகாலத்தில் இங்கு திரும்பி வந்தால் அவளும் எங்களைப் போல் தானே பிரச்சினைகளை முகம் கொடுக்க வேண்டி வரும்' என்பார். அப்பா இப்பொழுது தனது எதிர்காலத் திட்டத்தை மாற்றிக் கொண்டார். 'நான் இன்னும் கொஞ்சம் நல்லாக உழைத்து, முழுதாகப் பணம் செலுத்தி ஒரு வீடு வாங்கிக் கொஞ்சம் காசையும் வங்கியில் உங்களுடைய அன்றாடச் செலவுக்காக வைப்பில் போட்டு வைத்து விட்டு நான் மட்டும் கொஞ்சக் காலம் அங்கும் கொஞ்சக் காலம் இங்குமாகக் காலம் தள்ள வேண்டும்.' என்பார். அப்பொழுதெல்லாம் அம்மா 'இவ்வளவு காலம் உங்களுடன் காலந்தள்ளியது போதும். என்னுடைய கடைசி காலத்திலும் ஒரு போதும் உங்களுடன் இருக்க மாட்டேன்' என்று வேடிக்கையாகக் கூறுவா. ஆனால் அதற்கு அப்பா என்னிடம் 'குஞ்சூ! நீ டாக்டராக வந்து அம்மாவுக்கும் ரிஷப்சனில் ஒரு வேலை போட்டுக் கொடுத்து விடு. அது தான் அவவுக்குச் சரி' என்று கூறிச் சிரிப்பார். அதற்கு நான் 'அப்பா! உங்களுக்கும் கூடவேலை போட்டுத் தந்து விடுகிறேன்' என்பேன். அதற்கு அப்பா சிரித்துக் கொண்டே 'நீ பொல்லாத குஞ்சம்மா!' என்பார்.
ஆனால் கொஞ்ச நாட்களாக அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வர ஆரம்பித்து விட்டதன் காரணம் தான் சரியாக எனக்கு விளங்கவில்லை. சின்னச்சின்ன விசயங்களிற்கெல்லாம் சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். சாதாரணமாக ஆரம்பிக்கும் சண்டை விரைவிலேயே சூடு பறக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பா கையில் கண்டதையெல்லாம் எடுத்து அம்மாவின் மேல் எறியத் தொடங்கி விடுகிறார். கையில் அம்மா அகப்பட்டு விட்டால் கண்டபடி அடிக்கவும் ஆரம்பித்து விடுகின்றார். ஆரம்பத்தில் சும்மா இருந்த அம்மாவும் பதிலிற்கு கையிலகப்பட்டதையெல்லாம் எடுத்து அப்பாவின் மேல் எறிய ஆரம்பித்து விடுகின்றா. அம்மாவும் அப்பாவும் சிறுவயதிலிருந்தே ஒன்றாகப் பழகியவர்களாம். அவர்களிற்கிடையில் என்ன நடந்து விட்டது. அப்பாவின் ஆக்களெல்லோரையும் அப்பா கனடா எடுத்து விட்டாராம். அம்மாவின் ஆக்களெல்லாம் இன்னும் ஸ்ரீலங்காவில் தான். அப்பா அடிக்கடி கூறுவார் 'நீ கொஞ்ச நாளைக்காவது ஊருக்குப் போய் உன்னுடைய ஆக்களைப் பார்த்து வா'வென்று. ஆனால் அம்மாவோ அடிக்கடி தேவையில்லாமல் அப்பாவுடன் அப்பாவின் ஆக்களை எடுத்தெறிந்து கதைக்கத் தொடங்குவா. உடனே சண்டை ஆரம்பித்து விடும். அதுவரை அமைதியாகவிருக்கும் அப்பாவுக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வரும். யுத்தம் தொடங்கி விடும். இடையில் அகப்பட்டுக் கொண்டு நான் முழிக்க வேண்டி வரும். எதற்காக இவர்கள் இப்படி எதற்கெடுத்தாலும் சண்டை பிடிக்கிறார்கள். ஒரு நாள் பொறுக்க மாட்டாமல் 'கனடியர்கள் இவ்விதம் சண்டை பிடிக்க மாட்டார்கள். நீங்கள் ஸ்ரீலங்கர்கள் ஏனிப்படி சண்டை பிடிக்கிறீர்களோ' என்று கேட்டு விட்டேன். அப்பாவுக்கு அது மனதைத் தைத்து விட்டது. 'இங்குள்ள ஏனைய கனடியர்கள் சிலர் கேட்பதைப் போலவே கேட்டு விட்டாயேயம்மா' என்று கவலைப் பட்டார். எனக்கும் வருத்தமாகப் போய் விட்டது. 'எப்படியம்மா இவ்விதம் பிரித்துப் பார்க்க இந்த்ச் சின்ன வயசிலை மனசு வந்தது' என்று சரியாகக் கவலைப் பட்டார். அப்பாவைத் தடவி ஒரு மாதிரி சமாதானம் செய்து விட்டேன்.' ஒரு மாலையில் வழக்கம் போல் இருவரும் சண்டை பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
'கனடா வந்த இந்த பத்து வருடங்களில் என்னத்தைச் சாதித்துக் கிழித்துப் போட்டீர்கள். உங்களுடைய ஆட்களென்றால் உங்களுக்குப் பதறிக் கொண்டு வருகின்றது. எங்களைப் பற்றிக் கொஞ்சமாவது உங்களுக்குக் கவலையிருக்கிறதா?' என்று அம்மா கேட்டதும் அப்பாவுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. 'இத்தனை வருசமாய் உங்களை பராமரித்துக் கொண்டு வருகின்றேனே. அது உனக்குத் தெரியவில்லையா?' என்று அப்பா கேட்டதும் அம்மா 'என்ன ஊரில் மற்றவர்கள் செய்யாததைச் செய்து கிழித்துப் போட்டீர்கள். எல்லோரும் தானே குடும்பத்தைப் பார்க்கின்றார்கள். நீங்களில்லையென்றால் சமூக உதவிபணத்திற்கு விண்ணப்பித்திருப்பேன்' என்று கூறியதும் தான் அப்பாவால் தாளமுடியவில்லை. அதன் பிறகு நானும் என்னை வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டேன். அவர்களிருவரின் சண்டையில் இடையில் குறுக்கிடுவதில்லை. ஆனால் சரியாகக் கவலையாகத் தானிருக்கும். ஆனால் இவ்விதம் அடிக்கடி ஆரம்பித்த சண்டைகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி ஒரு நாள் அப்பா வீட்டை வருவதையே நிறுத்திக் கொண்டார். என்னால் அதன் பிறகு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. அம்மாவும் எந்த நேரமும் ஒரே அழுதபடி. அப்பா எங்கிருக்கிறாரென்றே யாருக்கும் தெரியவில்லை.ஆனால் அப்பா டொராண்டோவில தான் தன்னுடைய நண்பரொருவருடன் இருப்பதாக அறிந்தோம். அந்த நண்பரூடாக அப்பா என்னுடன் தொடர்பு கொண்டார். 'அப்பா! ஏனப்பா! எங்களை விட்டுப் பிரிந்து போனீர்கள். நீங்களில்லாமல் எனக்கு ஒன்றுமே பிடிக்கவில்லை. வீட்டு வேலை ( Home work) செய்வதற்கு எனக்கு யாருமே உதவியில்லையே' என்றேன். அதன் பிறகு அப்பா ஒவ்வொரு நாள் மாலையிலும் எனக்காக வந்து எமது தொடர் மாடிக் கட்டடத்தில் வெளியில் அழைப்பு மணியை அழைத்துவிட்டுக் காத்திருப்பார். இருவருமாக அருகிலிருக்கும் நூலகம் செல்வோம். வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்ததும் அப்பா என்னை 'மக்டானல்ட்; கூட்டிச் செல்வார். ஒவ்வொரு நாளும் அப்பா என்னை மறுபடியும் வீடு கொண்டு வந்து விடும்போது 'அப்பா! எப்ப திரும்பவும் எங்களுடன் வந்திருக்கப் போகின்றீர்கள்' என்பேன். அதற்கு அவர் 'குஞ்சூ! உன் அம்மா தனியாக இருந்து வாழ்ந்து பார்த்தால் தான் எல்லாவற்றையும் உணர முடியும். அவ உண்ர்ந்த பின் அழைத்தால் வருவேன். அதன் பிறகு இவ்விதம் தேவையற்ற சண்டைகளைப் போடக் கூடாது.' என்பார். அம்மாவிடம்' அம்மா! நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள். அப்பா இவ்விதம் கூறுகிறார்களே' என்பேன். அதற்கவர் 'நீ பேசமல் இருக்க மாட்டாய். எப்ப அவர் போய் விட்டாரோ. அப்பவே அவரை நான் கை கழுவி விட்டேன். என்னாலும் தனியாக வாழ முடியும்." என்று ஆத்திரத்துடன் கூறுவா. ஆனால் அதன் பிறகு அவவிற்கு அழுகை வந்து விடும். எதற்காக அம்மாவும் அப்பாவும் இவ்விதம் வீண் பிடிவாதம் பிடித்துக் கொண்டு வாழுகிறார்களோ தெரியவில்லை..
நான் ஒருத்தி இருப்பதை இதனால் எனக்கேற்படும் பாதிப்புகளை ஏன் இவர்கள் உணர்கிறார்களில்லை.
இவர்களது சண்டைகளெல்லாம் தேவையற்ற விடயங்களிற்காக இருப்பதாக எனக்குப் படுகிறது. இவர்களுக்கேன் அவ்விதம் படுவதில்லை. அப்பா! வேண்டுமானல் எங்களுடன் மீண்டும் வந்து விடுங்கள். அப்படி வந்து விட்டால் நாங்களெல்லோருமாக நீங்கள் கூறியது போல் இந்தியாவோ எங்கோ வரவும் நான் தயாராகவிருக்கிறேன் அப்பா! எனக்கு அது விருப்பமில்லாவிட்டாலும் எனக்கு நீங்களும் அம்மாவும் தான் முக்கியம் அப்பா. மீண்டும் எங்களுடன் வந்து விடுங்களப்பா. வேண்டுமானால் நீங்களிருவரும் ஒருவருக்கொருவர் கதைக்காவிட்டாலும் பரவாயில்லை. ஒன்றாயிருங்கள். அது போதுமெனக்கப்பா! அப்பா! அடிக்கடி நீங்கள் உங்களது பால்ய காலத்து அனுபவங்களைப் பற்றிக் கூறுவீர்களே! எனக்கும் அத்தகைய அனுபவங்களைத் தரவாவது நீங்கள் எங்களுடன் வந்திருக்கத் தான் வேண்டும். அங்கு உங்களது சொந்த ஊரில் யுத்தம்மென்றுதானே இங்கு வந்தீர்கள். அங்கு தான் யுத்தம் எல்லோரையும் பிரித்து வைத்திருக்கிறது. இங்கும் உங்களிற்கிடையிலொரு யுத்தம் தேவைதானா? தேவையில்லாத விசயங்களிற்கெல்லாம் இவ்விதமொரு பிரிவினைத் தரும் யுத்தம் தேவைதானா? சொல்லுங்கள் அப்பா! சொல்லுங்கள் அம்மா! அப்பா! எப்போ நீங்கள் மீண்டும் வரப் போகின்றீர்கள்? அம்மா! எப்போ உங்களுடைய வீண் பிடிவாதத்தினை விட்டொழிக்கப் போகின்றீர்கள்?
நன்றி: திண்ணை.காம், பதிவுகள், ஞானம் (புலம்பெயர் சிறப்பிதற் தொகுப்பு) & ஈழநாடு (கனடா) -
*As an Amazon Associate, I earn from qualifying purchases
No comments:
Post a Comment